தோட்ட உதவியாளர்களுக்கு நீதி வேண்டும்
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கிய தோட்ட உதவியாளர்களுக்கு நீதி வழங்குமாறு இன்று (27) போராட்டம் நடத்தியுள்ளது.

கொட்டகலை மவுண்ட்வேர்ணன் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னால் திரண்ட தோட்ட சேவையாளர்கள், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும், பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்கள்.

மேலும், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ போன்ற வேலைத்திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால், பக்கச்சார்பாக செயல்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ். இளையராஜா தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் கடந்தும், பொலிஸார் தாமதமாக செயல்பட்டதாகவும், இன்று சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. பொதுமுகாமையாளர் தலைமறைவாகி இருப்பதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.