நானுஓயாவில் மண்சரிவினால் 120 பேர் இடம்பெயர்வு
நானுஓயா – சமர்செட் , லேங்டல் தோட்டத்தில் இன்று (30) காலை தொடர் லயன் குடியிருப்பின் பின்புறத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்காலிகமாக நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் இப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தோட்ட நிர்வாகத்தினர் மக்களை சந்தித்து நிலைமையை விசாரித்ததோடு, நிவாரண உதவிகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்துடன் மக்கள் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்து மண்சரிவினால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனினும் இதுவரை எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ எதுவும் இல்லையெனவும் மக்கள் தெரிவித்தனர்.