நாவலப்பிட்டியில் கொடூரமான கொலை: கணவன் சரணடைந்தார்
நாவலப்பிட்டியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேக நபர், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை நடந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவர் இந்த கொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.
உயிரிழந்த பெண் தனது கணவனுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடுகளால், தனது மகளின் வீட்டில் தங்கியிருந்தார். கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவர், திங்கட்கிழமை (03) நாவலப்பிட்டிக்கு வந்து, அங்கு நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றுஇ மகளின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 1.30 மணியளவில், கயானியின் கணவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், தப்பிக்க முயன்ற கயானியை வீட்டுக்கு வெளியே பின்தொடர்ந்து, மீண்டும் கத்தியால் தாக்கி, தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
தாயைக் காப்பாற்ற முயன்ற மகளும் காயமடைந்துள்ளார். இந்த கொலை, குடும்பத் தகராறின் விளைவாக நடந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் சிறிது காலமாக பிரிந்து வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கயானி தில்ருக்ஷி குமாரியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.