சிவனொளிபாதமலையில் பொலித்தீன் பாவனையைக் குறைக்க தீர்மானம்

சிவனொளிபாதமலை அதிகூருணர்வு வலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் குறைத்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 06 மாதகாலம் நீடிப்பதுடன், குறித்த காலப்பகுதியில் அங்கு வருகை தருகின்ற யாத்திரிகர்கள் மற்றும் ஏனைய நபர்களால் கழிவகற்றப்படும் உக்கலடையும் மற்றும் உக்கலடையாத கழிவுப் பொருட்கள் அப்பிரதேசத்தில் அதிகளவில் சேர்கின்றன.

சிவனொளிபாதமலை வனப்பிரதேசம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தால் உள்வாங்கப்பட்டுள்ள அதிகூருணர்வு வலயமாக இருப்பதுடன், குறித்த பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவம் செய்வது காலத்தின் தேவையாகவுள்ளது.

அதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் குறித்த பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றாடல் அமைச்சு கீழ்க்காணும் படிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றமையை சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியதுடன், அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

  • தற்போது தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் மூலப்பொருளாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொதிகள் (லன்ஜ் சீற் போன்ற), அதிகூடிய தடிப்புடைய பொலி எத்தலீனால் தயாரிக்கப்பட்ட பைகள், சிறிய பக்கட்டுக்கள், விரிவாக்கப்பட்ட பொலிஸ்ரைறின்வலினால் தயாரிக்கப்பட்ட தனி அலகுப் பயன்பாட்டு பைகள், தனி அலகுப் பயன்பாட்டு பானங்கள் அருந்தும் குழாய், கலக்கிகள், தனி அலகுப் பயன்பாட்டு பீங்கான்கள், கரண்டிகள், முள்ளுக்கரண்டி மற்றும் கத்திகள் இப்பிரதேசத்தில் விற்பனை செய்வதோ யாத்திரிகர்கள் எடுத்துச் செல்வதை முழுமையாகத் தடை செய்தல்.
  • ஒரு லீற்றருக்குக் குறைவான தனி அலகுப் பயன்பாட்டு பிளாஸ்ரிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பானங்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்தல்.
  • பொலித்தீன் பொதி மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பானங்கள், மருந்துகள் அல்லது ஏனைய பொருட்கள் எதுவும் சுற்றாடல் அதிகூருணர்வு வலயத்தில் இடுவதைத் தடை செய்தல்.
  • சுற்றாடல் அதிகூருணர்வு வலயத்திலுள்ள வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்ரிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பானங்கள் அல்லது வேறு பொருட்களின் விற்பனையின் பின்னர் உருவாகின்ற கழிவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய பொறுப்பை குறித்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கே ஒப்படைத்தல்.
  • நீரூற்றுக்கள் மற்றும் நீரோட்டங்களை மாசுபடுத்தல் மற்றும் குறித்த இடங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை இடுவதைத் தடை செய்தல்.
  • விற்பனை நிலையங்களை அமைக்கும்போதும், நடாத்திச் செல்லும்போதும் சேர்கின்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் சரியான வகையில் சேகரித்து சிவனொளிபாதமலை அதிகூருணர்வுப் பிரதேசத்திற்கு வெளியே கொண்டு சென்று அந்தந்த உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் இறுதிக் கழிவகற்றும் பொறுப்பை அந்தந்த விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *