மலையக சிறார்களின் கல்வி நிலையை திட்டமிட்டுச் சீரழிக்கும் இ.போ.ச. நடத்துநர்கள்
நிலையான கல்வி வளர்ச்சியே தரமான பிரஜைகளை உருவாக்குமென்பதோடு, யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலிருந்தும் கல்வியைக் கற்க வழிவகைகளைச் செய்துகொடுக்க வேண்டிய கடப்பாடு அரசின் பொறுப்பாகும்.
கல்வி என்ற வார்த்தை இன்றைய நிலையில் மிக முக்கிய அம்சமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, இன, மத, மொழி, சாதி என்ற வேறுபாடின்றி அது பொதுவாக அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும்.
தெற்காசியாவில் எழுத்தறிவு வீதம் கூடிய நாடாக இலங்கை இருந்தபோதிலும் மலையகத்தில் அந்த நிலையில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இலங்கையில் தற்போது காணப்படும் முறைசார் கல்வியின் பயனாக பலர் இன்று பல்கலைக்கழகம் வரை சென்று தமது உயர்கல்வியைத் தொடர முடிகிறது.
265 மில்லியனுக்கு அதிகமான சிறார்கள் தற்போது பாடசாலையிலிருந்து விலகியுள்ளதாக சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. இதில் 22 வீதம் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் தாய்மொழி வாசிப்பு ஆகியவற்றில் ஆர்வம் குறைவாகக் காணப்படுவதாக ஆராயப்பட்டுள்ளது.
ஆரம்பக் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது பிள்ளையின் அடிப்படை உரிமையாகும். குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சுயவளர்ச்சியுடன் வாய்ப்புகளின் வழிகளைத் திறந்து தலைமுறைக்கிடையிலான வறுமையைக் குறைத்து மாணவர்களின் உயர் கல்வியை உறுதிப்படுத்துவதில் ஆரம்பக் கல்வியின் பங்கு அளப்பரியது.
கல்வி முறை பொதுவாக ஒரு நாட்டின் தொடர்புடைய சட்டங்களின்படி ஒழுங்கமைக்கப்பட்டாலும் ஒரு நாட்டுக்கான கல்வி முறைமையானது ஒழுங்கமைக்கப்படாத பல அம்சங்கள் பரிமாணங்களையும் கொண்டிருப்பதென்பதும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பொதுவாக ஒரு கல்வி அமைப்பு ஒரு நாட்டின் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் கல்வியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் கல்வி கற்பதற்குள்ள அனைத்துக் கூறுகளுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) அதன் சர்வதேச தரக் கல்வி (ISCED) அமைப்பில் நிலை (முன் ஆரம்பக் கல்வி) முதல் 8 வரையுள்ள ஒன்பது நிலைக் கல்வியை அங்கீகரித்துள்ளது. யுனெஸ்கோவின் சர்வதேச கல்விப் பணியகம், நாடு சார்ந்த கல்வி முறைமைகள் மற்றும் அவற்றின் நிலையான தரவுகளைப் பராமரிக்கிறது.
தரமான கல்வி இல்லாததற்கான காரணங்கள் போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை பாடசாலைகளின் மோசமான நிலைமைகள் மற்றும் தோட்டப்புற சிறார்களுக்கு வழங்கப்படும் நியாயமான வாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகள், கல்வி வழங்க கல்வி உதவித்தொகை, ஆசிரியர் பயிற்சிப் பட்டறை, பாடசாலைக் கட்டிடம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை இன்னும் குறைபாடாகவே காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், அண்மையில் – அதாவது கடந்த 06-03-2025 அன்று ஹட்டன் அரச பஸ் நடத்துநரொருவர் கினிகத்தேனை கடவளை தமிழ்ப் பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து பலவந்தமாக வெளியேற்றும் காணெளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் அரச பஸ்களில் பருவகால சீட்டுகளைப் பெற்ற தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கும் நிலையை மிக நீண்டகாலமாக செய்து வருகின்றார்கள்.
இவ்வாறான ஒரு நிலைமை சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் தெரியவந்தது. ஆனால், இந்நிலை நாடுபூராவும் நடக்கிறது. அவை வெளிவரவில்லை. இ.போ.சவில் கடமை புரிவோரெல்லாம் இப்படியான கீழ்த்தரமான வேலைகள் செய்வதில்லை. நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அதேவேளை, 2025 பெப்ரவரி மாதம் இ.போ.ச வெளியிட்டுள்ள அறிக்கையின்படி – அதாவது, பருவகாலச் சீட்டை (Season ticket)) வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் ஏற்றிச்செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிக்கையில், இவ்விடயங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
யாரேனும் ஊழியரொருவர் இந்தப் பருவச்சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள் அனைவரையும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களை ஏற்றிச்செல்ல மறுக்கும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இ.போ.ச. அறிவித்துள்ளது.
முறைப்பாடுகள் இருப்பின், 1958 என்ற எண்ணை அழைத்து ளுடுவுடீ தகவல் மையத்துக்குப் பிரச்சினைகளைக் கூறும்படி சொல்லியுள்ளது. எனவே, இதில் இ.போ.ச. தனது நிர்வாகப் பொறிமுறையை செவ்வனே செய்துள்ளது. இருந்தபோதிலும் கடமையில் இருந்த அதிகாரியே தமது கடமையை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றாரென்பது தெரியவருகிறது.
இவ்வாறான இனவாத போக்குடன் நடந்துகொள்ளும் சிலரால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், இன ஒற்றுமை வீணடிக்கப்படுகிறது. மலையக சமூகம் கல்வியில் முன்னோக்கிச் செல்லமுடியாமல் இருப்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாகின்றன.
கினித்தேனை கடவளை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதியை காணொளியில் பார்த்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்றத்தில் மாணவர்களிடம் தாம் மன்னிப்புக் கேட்பதாக கூறியதோடு, பஸ் நடத்துநருக்கு 07-03-2025 பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறியதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அத்தோடு ஹட்டன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த அடிப்படை மனித உரிமை மீறல் இனியும் நடக்காதிருக்கும் வகையில் விசாரணையொன்றை நடத்தக்கோரி ஹட்டன் மனித உரிமை காரியாலயத்தில் முறைப்பாட்டுக் கடிதமொன்றையும் கையளித்துள்ளார்கள்.
இதுபோன்ற அசௌகரியங்கள் பல பிரதேசங்களில் நடக்கின்றன. ஆனாலும் அவை வெளிச்சத்துக்கு வராமல் போய்விடுகின்றன. மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எப்போதும் மாணவர்களாகி நீங்கள் தயாராக இருங்கள்.
நல்லொழுக்கம், நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதோடு அநீதி எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கத் தயாராகுங்கள்.