ஹட்டனில் கையெழுத்து சேகரிப்பு
மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கம், ஹட்டன் பஸ் நிலையத்தில் இன்று (15) கையெழுத்து சேகரிப்பை மேற்கொண்டனர்.
இதன்மூலம், தோட்டப் பகுதி மக்களுக்கு வீடுகள் மற்றும் காணி உரிமைகளை வழங்குமாறும், மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெருந்தோட்டப் பகுதியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும் நிலத்துடன் கூடிய வீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இதில் தொழிற்சங்கத் தலைவர் சிவனேசன், பொதுச் செயலாளர் அழகமுத்து நந்தகுமார் உள்ளிட்ட பல தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர் சிவனேசன் கூறியதாவது,
“பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் தோட்டப் பகுதி இளைஞர்கள் தனி குடும்பங்களாக உருவாகி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குடியேறி வணிகம், அரசு மற்றும் தனியார் துறைகளில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியும்,” என்றார்.
நிலம் அல்லது வீடு இல்லாத பெரும்பான்மையான மக்களிடமிருந்து கையொப்பங்களைச் சேகரித்து, அவற்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.