திடீரென உயிரிழந்த கால்நடைகள்
தலவாக்கலை ஹொலிரூட் ரத்னில்கல வீடமைப்பு திட்டத்திலுள்ள கால்நடை பண்ணையொன்றில் 7 ஆடுகள், வளர்ப்பு நாயொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை கால்நடை வைத்திய அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளதாவது: நேற்றைய தினம் (15) தனது பண்ணையில் நான்கு ஆடுகள் உயிரிழந்ததாகவும், நேற்று (16) மேலும் மூன்று ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாயும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆடுகள் வைக்கப்பட்டிருந்த பண்ணையின் பின்பகுதி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், சில குழுவினரோ அல்லது நபர்களோ கால்நடைகளுக்கு விஷத்தை கொடுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பண்ணையின் உரிமையாளர் ரொபர்ட் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூன்று ஆடுகள் நேற்று (16) பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக நுவரெலியா மற்றும் பேராதனை கால்நடை மருத்துவப் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை கால்நடை வைத்திய அலுவலகத்தின் கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.