ஜீப் விபத்தில் இருவர் காயம்

கினிகத்தேனையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற ஜீப், வீதியை விட்டு விலகி, நுவரெலியாவிலிருந்து கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் செல்லும் நானுஓயா, ஓயாவில் விழுந்ததில், ஜீப்பில் பயணித்த இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா-பிளாக்பூல் சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், ஜீப்பின் ஓட்டுநரின் நித்திரை கலக்கத்தால், ஜீப் வீதியை விட்டு விலகி, பிரதான வீதியில்இருந்த பல கான்கிரீட் தூண்களை உடைத்து சுமார் 20 அடி பள்ளத்தில் நானுஓயா ஆற்றில் விழுந்ததாக தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஜீப்பில் மூன்று பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஜீப்பும் பலத்த சேதமடைந்தது.
