நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கௌரவிப்பு
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கு பாரபட்சமின்றி சேவையாற்றி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவை நேற்று (06) ஊடகவியலாளர்கள் இணைந்து பாராட்டி கௌரவித்தனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போதும், பொருளாதார நெருக்கடியின் போதும் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்துள்ளார். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் கடும் மழை, வெள்ளம், மண்சரிவுகள் உட்பட ஏனைய காலநிலை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் பாதிக்கும் மக்களை சந்திக்க நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்துள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் சில தீர்க்கப்படாமல் காணப்பட்ட அதிக கோரிக்கைகளை மாதாந்தம் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசி உரிய தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இவ்வாறு சேவையாற்றிய நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவை இடமாற்றம் செய்த செய்தியை அறிந்த ஏராளமானவர் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் சென்று பாராட்டி வருகின்றனர்.
அதன்படி ஊடகவியலாளர்கள் சார்பாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
