மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
நுவரெலியா-உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், நுவரெலியா மாநகரசபையில் பணியாற்றிய, நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்ததை அவதானித்த மக்கள், உடனடியாக நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் மட்டுமே இருந்ததை கண்டனர். மூழ்கியவரை கண்டுபிடிக்க தீயணைப்பு படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், உடல் காணப்படவில்லை.
இன்று (25) உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் தேடுதல் நடத்தியபோது, நுவரெலியா கிரகறி வாவிக்கு செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலை அடுத்து, நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.