ரயிலில் இந்திய பிரஜையின் பயணப் பொதி திருட்டு: சந்தேக நபர் ஹட்டனில் கைது
கிஷாந்தன்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலின் மூன்றாவது பெட்டியில் இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் 22.01.2025 அன்று இங்குருஒயா மற்றும் கலபட ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட இந்திய பிரஜை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, காணாமல் போன பயணப் பொதியுடன் சந்தேக நபரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.விசாரணைகளின் மூலம், சந்தேக நபர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும், கண்டியிலிருந்து ஹட்டனுக்கு பயணிக்க ரயில் டிக்கெட் பெற்றிருந்தார் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மலையக ரயில் பாதையில் இதுபோன்ற திருட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.