நுவரெலியா – ராகலை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
நுவரெலியா – ராகலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று (14) காலை முதல் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நுவரெலியா – ராகலை மற்றும் நுவரெலியா – கந்தப்பளை தனியார் பஸ் சாரதிகளுக்கு இடையே நேற்று (13) மாலை கந்தப்பளை மற்றும் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி தொடர்பான நீண்டகால முரண்பாடுகளே இதற்குக் காரணம் என இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரி, நுவரெலியா – ராகலை பிரதான வீதியில் இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீர் பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
