செப்பு கம்பிகளை திருட முற்பட்டவர் கைது
33,000 வோட் உயர் மின்னழுத்த மின்மாற்றி இணைப்பு அமைப்பிலிருந்து தரையில் இணைக்கப்பட்ட செப்பு கம்பியை வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை வீதியில் விநாயகர் கோவில் அருகே மின்மாற்றியின் செப்பு கம்பியை அறுத்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் இன்று (29) அதிகாலை ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மற்றொரு நபருடன் சேர்ந்து பண்டாரவளையில் இருந்து பதுளைக்கு 6 மின்மாற்றிகளில் இருந்து வெட்டப்பட்ட செப்பு கம்பிகளை இரண்டு உறைகளில் எடுத்துச் சென்றபோது, சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபருடன் இருந்த மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் அவரைக் கைது செய்வதற்கும், நாட்டின் பிற பகுதிகளிலும் அவர்கள் இதேபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியவும் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.