மலையகத்தை உலுக்கிய வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்

இரு தரப்பினரிடையே எற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, பொகவந்தலாவை நகரப்பகுதியில் நேற்று (16) வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாக்குதல் மேற்கொண்ட நபர் கடந்த 15ஆம் திகதி தனது தங்க சங்கிலி ஒன்று காணாமல் போயுள்ளதாகவும், தனது தங்க சங்கிலியை தாக்குதலுக்கு உள்ளான நபர் திருடியுள்ளதாக கூறி பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் போது, தாக்குதல் நடத்தியுள்ள நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இந்த இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை சமரசம் அடைந்த நிலையிலே, இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை இரண்டு பேர் கொண்ட குழு வாளால் வெட்டும் சம்பவம் நகரில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.
தாக்குதலை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களும் தலைமறைவாகியுள்ளதோடு சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொகவந்தலாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பலத்த வெட்டு காயங்களுடன் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.