முச்சக்கர வண்டியில் பயணித்த 2 வெளிநாட்டவர்கள் காயம்
க.கிஷாந்தன்
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்கள், வட்டவளை பிராந்தியத்தில் இன்று (26) பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளனர்.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்த பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், 2 ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த பிரஜைகள் காயமடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்களில் ஒருவர் வண்டியை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் கூறினர். அதிவேகத்தில் சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்தது. விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.
காயமடைந்த இரு வெளிநாட்டவர்களும் வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.