நகையை கொள்ளையடிக்க முயன்ற பெண் பிணையில் விடுவிப்பு

ஹட்டன் நகரின் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க நெக்லஸை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒரு பெண்ணை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அந்த பெண்ணை, ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்தீபன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ரூ.500,000 தனிப்பட்ட பிணையில் விடுவிக்கவும், வழக்கை இம்மாதம் 05ம் திகதி அன்று மீண்டும் விசாரிக்கவும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தயாரான ரோஷனாத சில்வா (வயது 26) ஆவார்.

ஹட்டன் பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் சிறிது காலமாக மஸ்கெலியா சாமிமலை பகுதியில் வசித்து வருவதாகவும், தற்போது கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டெடுக்க ஹட்டன் நகரத்திற்கு, கடந்த மாதம் 1 ஆம் திகதி, வந்த குற்றம் சாட்டப்பட்ட பெண், மீட்டெடுத்த தங்க நகைகளை அதிக விலைக்கு மீண்டும் அடகு வைத்து, ரூ.110,000 எடுத்துக்கொண்டு, தங்க நெக்லஸ் வாங்க சென்றுள்ளார்.

அந்தப் பெண்ணின் இடது கை அவரது கைப்பையின் உள்ளேயே இருப்பதை கண்டு சந்தேகமடைந்த நகைக் கடை உரிமையாளர், மிகுந்த கவனத்துடன் ஒரு பவுண் தங்க நெக்லஸைக் காட்டினார்.

அந்த நேரத்தில், அந்தப் பெண் கடை உரிமையாளரிடம் நகையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார், கடை உரிமையாளர் கோரிக்கையை நிராகரித்தபோது, அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து ஒரு திரவ டப்பாவை எடுத்து கடை உரிமையாளர் மீது விசிறியுள்ளார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த கடை உரிமையாளர், அருகிலுள்ள கடை உரிமையாளர்களின் உதவியுடன், அந்தப் பெண்ணைப் பிடித்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

தனது தந்தையின் நோய்க்கு பணம் செலுத்த பணம் தேடுவதற்காக ஹட்டன் நகரத்திற்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்ததற்கான பல ரசீதுகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பல நெக்லஸ்கள் அவரது கைப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *