வீதி புனரமைக்கப்படாமையால் சிரமம்…

நானுஓயா – டெஸ்போட் சந்தியிலிருந்து டயகம செல்லும் பிரதான வீதி பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில், வீதி எது குழி எது என்று தெரியாத அளவிற்கு பாதை குன்றும் குழியுமாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவற்றை தற்காலிகமாக நுவரெலியா வீதி அபிவிருத்தி சபையினால் குழிகள் நிரப்பப்படுகின்றது அது தற்போது பெய்யும் மழையால் மீண்டும் உடைந்து குழியாகுவதும் தொடர் கதையாக உள்ளது என தெரிவிக்கின்றனர் .
குறிப்பாக மெரயா மற்றும் கேம்ரி பகுதிகளில் ஆரம்பிக்கும் இடத்தில் வீதி எது குழி எது என்று தெரியாத அளவிற்கு பாதை குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மேலும் வீதியில் நடுவில் உள்ள பாரிய குழிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி வீதியில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
புதிதாக இந்த வீதியில் பயணிப்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் , சிறிய ரக மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்களில் பயணிப்போரின் வாகனங்களும் சேதமடைந்து வருகின்றன அத்துடன் குழிகள் தெரியாததால் , பலரும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றபோதிலும் , அவை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தபடாமையால் , பலரும் அந்த வீதி ஊடாக பயணித்து விபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது.
நுவரெலியாவில் இருந்து நானுஓயா டெஸ்போட் வழியாக டயகாமம் செல்லும் மிக முக்கிய போக்குவரத்து வீதியாகவும் இதில் தினமும் பாரஊர்திகள், வைத்தியசாலை நோயாளி காவு வண்டிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இவ்வீதியின் போக்குவரத்துச் செய்கின்றனர். இதேவேளை இலங்கை போக்குவரத்துசபை, தனியார் போக்குவரத்துசபையினரின் பஸ்களும் இவ்வீதியில் நுவரெலிவிலிருந்து – டயகாமத்திற்கு போக்குவரத்தில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பிரதான வீதியூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றார்கள் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாதணி அணிந்து நடந்து செல்ல முடியாத நிலமையே காணப்படுகின்றது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு நீண்ட நாட்களுக்கு நீண்டு , நிலைக்கக்கூடிய வகையில் இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் ,சாரதிகள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.