ஹட்டனில் இளைஞர் தாக்குதல்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்
ஹட்டன் நகரில் இளைஞர் ஒருவரை தலையில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டார்.
கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை ஹட்டன் நகரின் அம்பிகா சந்தியில் புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தர் வாகனம் ஒன்றில் வந்த நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து அவரால் தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டார்.
தாக்குதல் நடத்திய நபர் கொட்டகலை பகுதியில் உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஆவார்.
இந்த சம்பவத்தில் தலைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான அவர் தற்போது சுயநினைவின்றி கோமா நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
இவரது தலைப்பகுதியில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்கு கண்டி வைத்தியசாலையில் சி.டி.ஸ்கேன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. திருமணம் முடித்த இவர் ஒன்பது மாத குழந்தையொன்றின் தந்தையாவார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதன் பின்னர் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸார் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவில்லையென பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (23) தாக்குதல் நடத்திய நபர் தனது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையானார்.
இதன்போது தாக்கப்பட்ட இளைஞரின் உடல் நிலை அறிக்கையை வைத்தியசாலை ஊடாக பெற்றுக்கொண்ட நீதிமன்றம் தாக்குதல் நடத்தியவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
தாக்குதலுக்குள்ளான தனது கணவர் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பழங்கள் விற்பனை செய்து வருபவர் என தெரிவிக்கும் அவரது மனைவி, தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே 11ஆம் திகதி ஹட்டனுக்கு வருகை தந்தார் என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தான் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.