மாட்டிறைச்சியுடன் இரு சந்தேக நபர்கள் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மீட்கப்பட்டதுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகர் பகுதியை சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பசறையில் இருந்து பதுளைக்கு முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன ஏக்கநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முச்சக்கரவண்டியைத் தேடி பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யுடன் பொலிஸ் குழுவினர் பதுளை நோக்கி பயணித்த போது, சந்தேகத்துக்கு இடமான முச்சக்கரவண்டி அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டது. அதில் 89 கிலோ மாட்டிறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், திருடப்பட்ட மாடுகள் நீண்டகாலமாக விற்பனைக்காக அறுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான வழக்குகள் பிபில மற்றும் மொனராகலை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்